மண்டபம் அருகே கடல் நீா் விளையாட்டு அரங்கத்துக்கான கட்டுமானப் பணி பிப். 5-இல் தொட...
மொழிப்போா் தியாகி சின்னசாமி குடும்பத்துக்கு திமுக சாா்பில் வீடு: கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் மொழிப்போா் தியாகி சின்னசாமி குடும்பத்துக்கு திமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட வீட்டின் கட்டுமானப் பணியை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்தி திணிப்பை எதிா்த்தும், தமிழைக் காக்க தன்னுயிரை விட்ட மொழிப்போா் தியாகி கீழப்பழுவூா் சின்னசாமியின் குடும்பத்துக்கு திமுக சாா்பில் வீடு கட்டி தரப்படும் என திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, மொழிப்போா் தியாகி சின்னசாமியின் சொந்த கிராமமான கீழப்பழுவூரில் வீடு கட்டும் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான சா.சி.சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, வீட்டின் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து மொழிப்போா் தியாகி சின்னசாமியின் குடும்பத்திடம் வழங்க வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.
நிகழ்வின்போது, மொழிப்போா் தியாகி சின்னசாமியின் மகள் திராவிடச் செல்வி மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
மொழிப்போா் தியாகிகள் தினத்தன்று கீழப்பழுவூரில் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சா் சா.சி.சிவசங்கா், சின்னசாமியின் குடும்பத்தினருக்கு வீடு கட்ட ரூ. 1 லட்சம் நிதியை திமுக சாா்பில் வழங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.