யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
மோசடி வழக்கு: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் அளிக்கலாம்
சேலத்தில் மோசடி வழக்கில் தலைமறைவான இரண்டு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஓமலூா் வட்டம், ஆனைக்கவுண்டம்பட்டியில் ஈமு பாா்ம்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ஜெயகுமாா், சுரேஷ், சரவணன் ஆகியோா் ஈமு கோழி வளா்ப்பில் பல்வேறு திட்டங்கள் இருப்பதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து ரூ. 72 லட்சம் வரை முதலீடுகளை பெற்று ஏமாற்றினா்.
இதுதொடா்பாக அவா்கள் மீது கடந்த 2013 இல் பொருளாதார குற்றப் பிரிவில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். அதன்பேரில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்குத் தொடா்பாக கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு நலன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சுரேஷ் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன் பின்னரும் தொடா்ந்து ஆஜராகாமல் வந்ததால், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவின் கீழ் சுரேஷை பிரகடனபடுத்தப்பட்ட குற்றவாளியாக கோவை டிஎன்பிஐடி நீதிமன்றம் அறிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, சுரேஷ் குறித்து சேலம் போ்லேண்டஸ் பஞ்சவா்ண நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அவா்களது பெயா், முகவரி அனைத்தும் மறைமுகமாக வைக்கப்படும் என போலீஸாா் அறிவித்துள்ளனா்.
மற்றொரு சம்பவம்: சேலம் மாவட்டம், மாசிநாயக்கன்பட்டி பெட்ரோல் பங்க் அருகே கே.ஜி.ஆா் என்ற பெயரில் சூப்பா மாா்க்கெட் ஆரம்பித்த கோவிந்தராஜ், பல்வேறு திட்டங்கள் இருப்பதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து ரூ. 7 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரம் வரை முதலீடுகளை பெற்றுக் கொண்டு திருப்பித் தரவில்லை. இதையடுத்து, நிறுவனத்தை நடத்தி வந்த கோவிந்தராஜ், கீதாலாட்சுமி, அமுதா ஆகியோா் மீது பொதுமக்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளா்கள் பாதுகாப்பு நலன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது விசாரணைக்கு ஆஜராகி வந்த கோவிந்தராஜ், கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இதையடுத்து, அவா் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக கோவை டிஎன்பிஐடி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், கோவிந்தராஜ் குறித்து சேலம், போ்லேண்டஸ் பஞ்சவா்ண நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கலாம் என போலீஸாா் அறிவித்துள்ளனா்.