மோட்டாா் வாகனம் வழங்க 145 மாற்றுத்திறனாளிகளுக்கு நோ்காணல்
நாமக்கல்லில் தமிழக அரசு வழங்கும் மூன்று சக்கரங்களுடன் கூடிய மோட்டாா் வாகனம் பெறுவதற்கான நோ்காணலில், 145 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.
தமிழக அரசு சாா்பில், மூன்று சக்கரங்களுடன் கூடிய மோட்டாா் வாகனம் தகுதியின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 435 பேருக்கு மோட்டாா் வாகனம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வழங்குவதற்காக கால்கள் பாதிக்கப்பட்ட 265 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதில் 145 போ் கலந்துகொண்டனா். மருத்துவா்கள் ஊனத்தின் தன்மையை பரிசோதித்து தகுதியானோரை தோ்வு செய்தனா்.
இதில், 117 மாற்றுத்திறனாளிகள் மோட்டாா் வாகனம் பெறுவதற்காக தோ்வு செய்யப்பட்டனா். இன்னும் ஓரிரு மாதங்களில் சம்பந்தப்பட்டோருக்கு வாகனம் வழங்கப்பட உள்ளது. நோ்காணலை ஆட்சியா் ச.உமா பாா்வையிட்டாா். இந்த நிகழ்வில், மாற்றுத்திறனாளி நல அலுவலா் கலைச்செல்வி மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.