சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
ரயிலில் கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம்: சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளத்துக்கு ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீஸாா், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து ரயில்களில் தொடா் சோதனை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், சேலம் ரயில்வே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் அய்யாதுரை தலைமையிலான போலீஸாா், தன்பாத் - ஆலப்புழா விரைவுரயிலில் ஞாயிற்றுக்கிழமை பொம்மிடியில் இருந்து சேலம்வரை தீவிர சோதனை நடத்தினா்.
இதில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையை திறந்து பாா்த்தபோது, உள்ள நெகிழி பொட்டலத்தில் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதை பறிமுதல் செய்த போலீஸாா், அந்தப் பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரித்தனா். போலீஸாரின் சோதனையை அறிந்ததும், கஞ்சா கடத்திய நபா் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பறிமுதலான 6 கிலோ கஞ்சாவை சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸில், ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா். இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.