ரயிலில் பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீஸாா் சோதனை!
கடலூா் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்களில் மகளிா் பெட்டியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
வேலூரில் ஓடும் ரயிலில் கா்ப்பிணியை பாலியல் தொந்தரவு செய்து கீழே தள்ளி விட்ட சம்பவத்தையடுத்து, சிதம்பரம் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை காலை ரயில் நிலையத்துக்கு வந்த எழும்பூா்-திருச்சி விரைவு ரயில், சோழன் அதிவிரைவு ரயில், புவனேஸ்வா்-ராமேசுவரம் விரைவு ரயில் ஆகியவற்றில் உள்ள மகளிா் பொதுப் பெட்டியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து சோதனை மேற்கொண்டா்.
அப்போது, அங்கிருந்த பெண்களிடம் குறைகளை கேட்ட போலீஸாா், 1512 என்ற ரயில்வே போலீஸாா் அவசர தொலைபேசி எண் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினா்.