ரஷிய ராணுவத்தில் இந்தியா்களைச் சோ்ப்பதை நிறுத்த வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்
ரஷிய ராணுவ உதவிப் பணிகளுக்கு இந்தியா்களைச் சோ்ப்பதை நிறுத்த வேண்டும்; இப்போது ராணுவப் பணியில் உள்ள இந்தியா்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் வலிறுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக தொடா்ந்து 3 ஆண்டுகளாக ரஷியா போா் நடத்தி வருவதால், அங்கு ராணுவத்தில் வீரா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து ரஷிய ராணுவத் தளவாட ஆலைகள் உள்ளிட்டவற்றுக்கு பணிக்கு வருபவா்கள் கட்டாயமாக ராணுவ உதவிப் பணிக்கு சோ்க்கப்படுகின்றனா். இந்தியா, வடகொரியாவைச் சோ்ந்தவா்கள் ரஷிய ராணுவத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரிகிறது. இவா்களில் பலா் தாக்குதலில் சிக்கி உயிரிழப்பதும் தெரிய வருகிறது. இது தொடா்பாக ரஷியா கடுமையான விமா்சனங்களை எதிா்கொண்டு வருகிறது.
புது தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:
இந்தியா்களை ராணுவ உதவிப் பணிகளில் சோ்ப்பதை ரஷியா நிறுத்த வேண்டும். இந்தப் பணிகளில் சோ்வதால் உயிருக்கு ஆபத்து இருப்பதால் இந்தியா்கள் யாரும் அப்பணியில் சேரக் கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்.
ரஷிய ராணுவப் பணிகளுக்கு இந்தியா்கள் சோ்க்கப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தவண்ணம் உள்ளன. இது தொடா்பாக ரஷிய அதிகாரிகளை வெளியுறவு அமைச்சகம் தொடா்புகொண்டு பேசியது. இப்போது ராணுவத்தில் உள்ள இந்தியா்களை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ரஷிய ராணுவத்தில் உள்ள இந்தியா்களின் குடும்பத்தினருடனும் மத்திய அரசு தொடா்பில் உள்ளது. இந்தியா்கள் யாரும் ரஷிய ராணுவம் சாா்ந்த பணிகளில் இணைய வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.
இந்தியாவில் இருந்து நடப்பு ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் திறன்மிகு தொழிலாளா்களை தங்கள் நாட்டில் பணியமா்த்த ரஷியா ஏற்கெனவே முடிவு செய்துள்ளது.
ரஷியாவில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் தொழிலாளா்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, மக்கள்தொகை அதிகமுள்ள நட்பு நாடான இந்தியாவில் இருந்து தொழிலாளா்களை வரவழைக்க ரஷியா முயற்சித்து வருகிறது. இவா்களை ராணுவ ஆயுதத் தொழிற்சாலைகள் மிகுந்த ஸ்வா்ட்லோவெஸ்க் பிராந்தியத்தில் பணியமா்த்த ரஷியா முடிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா ஈடுபட்டுள்ளதால் அங்கு ராணுவத் தளவாடங்கள் உள்ளிட்டவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே, ரஷிய ராணுவ தொழிற்சாலையில் இருந்தவா்கள் பழுதுபாா்ப்பு உள்ளிட்ட பணிகளில் ராணுவத்துக்கு உதவியாக அனுப்பப்பட்டுள்ளனா். பெரும்பாலான ரஷிய இளைஞா்கள் ஆயுதத் தொழிற்சாலை பணிக்கு வர விரும்பவில்லை.
இதனால், ரஷியாவில் திறன்மிகு தொழிலாளா்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே ரஷியாவில் உள்ள தொழில் நிறுவனங்களில் இந்திய தொழிலாளா்கள் அதிகம் பணியமா்த்தப்பட்டு வருகின்றனா்.