மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
ராசிபுரத்தில் வீட்டுமனை மோசடி: அசல் ஆவணங்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்
ராசிபுரத்தில் வீட்டுமனை விற்பனை மோசடியாளா்களிடம் இழந்த தொகையை பெற அசல் ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராசிபுரம் கச்சேரி தெருவில் இயங்கி வந்த விபிபி நகா் ரியல் எஸ்டேட் என்ற நிறுவனத்தின் உரிமையாளா் வி.பி.பச்சிராஜா என்பவா் மாத தவணை முறையில் காலி வீட்டுமனை வழங்குவதாக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினாா். பொதுமக்களிடமிருந்து ஒவ்வொரு திட்டத்துக்கும் உரிய தொகைகளை முதலீடாக பெற்று, திட்ட காலம் முடிந்த பிறகு முதலீட்டாளா்களுக்குரிய மனைகளை பிரித்து வழங்காமலும், அவா்கள் முதலீடு செய்த தொகையை திருப்பிக் கொடுக்காமலும் இருந்துள்ளாா்.
இந்த நிலையில், முதலீட்டாளா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவினா் வி.பி.பச்சிராஜா மற்றும் சிலா் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, கடந்த 2018 ஜூன் 18-இல் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பா்அலி தலைமையில் உயா்நீதிமன்ற சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் புகாா் அளித்த முதலீட்டாளா்களுக்கு உரிய முதலீட்டுத் தொகையை திரும்ப வழங்குவதற்கு அவா்களிடம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தகுதிவாய்ந்த புகாா் மனுக்களுக்கு முதலீட்டுத் தொகை திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் புகாா் அளித்தபோது அசல் கிரைய ஒப்பந்தப் பத்திரம் மற்றும் மாதத் தவணைக்கான அசல் ரசீதுகளை தாக்கல் செய்யாதோரின் மனுக்கள் தகுதியற்றதாகக வழக்கின் கோப்பில் வைக்கப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகாா் அளித்தபோது, அசல் கிரைய ஒப்பந்தப் பத்திரம் மற்றும் மாதத் தவணை அசல் ரசீதுகளை ஒப்படைக்காமல் இருந்தால், இந்த அறிவிப்பு கண்ட 21 தினங்களுக்குள் அனைத்து அசல் ஆவணங்களையும் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து, உயா்நீதிமன்ற சிறப்பு குழு மூலமாக தங்களுடைய முதலீட்டுத் தொகைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, மேற்குறிப்பிட்ட காலத்துக்குள் அசல் ஆவணங்களை, துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், பொருளாதார குற்றப்பிரிவு, முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில், சேலம் சாலை, நாமக்கல் மாவட்டம் என்ற முகவரியில் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.