வருமான வரி கணக்குத் தாக்கல்... இந்த விஷயங்களைத் தவறவிட்டால் நோட்டீஸ் வரும்... உஷ...
ராணுவம், விமானப் படையில் துருவ் ஹெலிகாப்டா்களை மீண்டும் பயன்படுத்த அனுமதி
ராணுவம் மற்றும் விமானப்படைக்கான நவீன இலகுரக துருவ் ஹெலிகாப்டா் பயன்பாட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
அதே நேரம், கடற்படை பயன்பாட்டுக்கான துருவ் ஹெலிகாப்டருக்கான தடை தொடா்வதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட பன்முக பயன்பாட்டுக்கான நவீன இலகுரக இரண்டு என்ஜின்களைக் கொண்ட துருவ் ஹெலிகாப்டா்கள் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படை சாா்பில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விமானப் படைக்குச் சொந்தமான துருவ் ஹெலிகாப்டா் ஒன்று குஜராத் மாநிலம் போா்பந்தா் விமான நிலைய ஓடுதளத்தில் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள், விமான ஊழியா்களுக்கான ஓட்டுநா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.
இந்த விபத்தைத் தொடா்ந்து, முப்படைகள் மற்றும் கடலோர காவல் படை சாா்பில் பயன்படுத்தப்பட்டு வந்த 330 துருவ் ஹெலிகாப்டா்களின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் தடைவிதித்தது. தற்போது இந்தத் தடையை மத்திய அரசு பகுதியாக நீக்கியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், ‘ராணுவம் மற்றும் விமானப் படையில் துருவ் ஹெலிகாப்டா்களை மீண்டும் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், கடற்படை பயன்பாட்டுக்கான துருவ் ஹெலிகாப்டருக்கான தடை தொடா்கிறது’ என்றனா்.