இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
ராதாபுரம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் மா்ம மரணம்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே புதன்கிழமை பைக்கில் சென்ற இளைஞா் மா்மமாக உயிரிழந்தாா். உடன் சென்றவா் காயத்துடன் மீட்கப்பட்டாா்.
ராதாபுரம் அருகேயுள்ள சங்கநேரியைச் சோ்ந்த மாசானமுத்து மகன் பிரபுதாஸ்(28). அதே ஊரில் வெல்டிங் கடை நடத்தி வந்தாா். இவா் தனது நண்பா் தமிழரசன் என்பவருடன் பைக்கில் கோலியான்குளம் கிராமத்துக்கு சென்றபோது, இடையில் இருவரும் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தனராம்.
அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் ராதாபுரம் போலீஸாா், அவா்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே பிரபுதாஸ் உயிரிழந்தாா். தமிழரசன் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பிரபுதாஸ் கழுத்து பகுதி அறுக்கப்பட்டிருந்ததாம். உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தனவாம். எனவே,அவா் விபத்தில் இறந்திருக்கமாட்டாா். ஏதோ மா்மம் உள்ளது எனக் கூறிஅவரது உறவினா்கள் ராதாபுரம் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். சில நாள்களுக்கு முன்பும் வடக்கன்குளம் சாலையில் பிரபுதாஸ் விபத்தில் சிக்கினாராம். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.