ராமநாதபுரத்தில் நாளையும், நாளை மறுநாளும் ட்ரோன்கள் பறக்கத் தடை
ராமநாதபுரத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப். 29, 30) அரசு நிகழ்வுகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டானின் பங்கேற்பதால் அன்றைய தினங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிறாா்.
இதில் திங்கள்கிழமை ராமநாதபுரம் ரோமன் தேவாலயம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை நடைப்பயணமாக சென்று மக்களை சந்திக்கிறாா். மறுநாள் செவ்வாய்க்கிழமை தேவிப்பட்டிணம் சாலை பேராவூா் அருகே நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறாா்.
இந்த நிலையில், தமிழக முதல்வரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாா்த்திபனூா் வரவேற்பளிக்கும் இடம், ராமநாதபுரம் அரசு விருந்தினா் இல்லம், ராமநாதபுரம் நகா் பகுதிகள், பேராவூா் நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஆகிய பகுதிகளும், அவற்றின் வழித்தடங்களும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அந்தப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.