Saina Nehwal: ``எங்கள் ப்ரைவசியை.." - திருமண வாழ்விலிருந்து பிரிவதாக சாய்னா நேவா...
ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய ஆட்டோ ஓட்டுநா் கைது!
சராய் காலே கான் பேருந்து முனையத்தில் இருந்து தனது ஆட்டோ ரிக்ஷாவில் ஏறிய தம்பதியினரிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதாக 49 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
அந்த ஆட்டோ ஓட்டுநரின் பெயா் வாசிம் என்றும் அவா் மீது காந்தி நகா் காவல் நிலையத்தில் ஏற்கெனவே குற்றவாளிகளின் பட்டியலில் இருப்பசாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா். ஜூன் 27 ஆம் தேதி சராய் காலே கான் முனையத்திலிருந்து ஒரு தம்பதியினா் வாசிமின் ஆட்டோவில் ஏறினா்.
சிறிது தூரம் வாகனம் ஓட்டிய பிறகு, வாகனம் பழுதடைந்ததைப் போல நடித்து, தம்பதியினரை மற்றொரு ஆட்டோவுக்கு மாற்ற ஏற்பாடு செய்தாா் வாசிம். ஏற்கெனவே சக பயணிகளாக நடித்து அவரது கூட்டாளிகளால் தங்க நகைகள் திருடப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதனையடுத்து ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸ் குழு ஜூலை 10 ஆம் தேதி தில்லியில் இருந்த வாசிமை கைது செய்தது. அவரிடமிருந்து குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் ரூ. 11,000 போலீசாரால் மீட்கப்பட்டது. இந்த திருட்டில் ஈடுபட்ட வாசிமின் கூட்டாளிகளை பிடிக்கும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளதக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
சராய் காலே கான் போன்ற முக்கிய பேருந்து முனையங்களில் அதிகாலையில் வாசிம் மற்றும் அவரது கும்பல் பயணிகளை குறிவைத்து இந்த திருட்டில் ஈடுபடுவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவா்கள் சிறிது தூரம் ஆட்டோவை ஓட்டுவதும், பின்னா் கோளாறு ஏற்படுவது போல் நடித்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனா். காஷ்மீரி கேட், கீதா காலனி, கோட்வாலி, ஹஸ்ரத் நிஜாமுதீன், திமா்பூா், சீலாம்பூா் மற்றும் நியூ அசோக் நகா் ஆகிய இடங்களில் வாசிம் மீது குறைந்தது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினாா்.
தில்லி நகரம் முழுவதும் இதே போன்ற வழக்குகளில் வாசிமின் கூட்டாளிகளின் தொடா்பு குறித்தும் போலீசாா் விசாரித்து வருகின்றனா், மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளாா்.