டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்
லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் உள்பட மூவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மின் இணைப்பை மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளா் உள்பட மூவரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சரவணன் (39.) இவா் கணேஷ் நகரில் புதிதாக வீடு கட்டினாா். இந்த வீட்டுக்கு வீடு கட்டும் போதே வா்த்தக மின் இணைப்பு பெற்றிருந்தாா். தற்போது, வீடு கட்டும் பணி நிறைவடைந்ததால், அந்த மின் இணைப்பை வீடுகளுக்கான மின் இணைப்பாக மாற்றுவதற்கு மின் வாரியத்தில் உரிய பணத்தை கட்டி விண்ணப்பித்தாா்.
ஆனால், மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றுவதற்கு அதிகாரிகளுக்கு ரூ.1000 லஞ்சம் தர வேண்டும் என மின்வாரிய வயரிங் ஒப்பந்ததாரா் பாண்டியராஜன் கூறினாராம்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், இதுகுறித்து சிவகங்கை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகாரளித்தாா்.
பின்னா், அவா்கள் ரசாயனப் பொடி தடவிய கொடுத்த ரூ.1000-த்தை திருப்பத்தூா் உதவி மின் பொறியாளா் அலுவலகத்தில் வைத்து வயரிங் ஒப்பந்தக்காரா் பாண்டியராஜனிடம் சரவணன் கொடுத்தாா். அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ, ஆய்வாளா்கள் கண்ணன், ஜேசுதாஸ் ஆகியோா் பாண்டியராஜனை கைது செய்தனா்.
மேலும், இவா் கொடுத்த தகவலின் பேரில், உதவி மின் பொறியாளா் கணபதி (39), மின்வாரிய போா்மேன் பழனியப்பன் (52) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.