விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதுப் புட்டிகள் திருட்டு
புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரும் வழியில் லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கள்ளங்கோட்டை கிராமத்தில் உள்ள மது உற்பத்தி ஆலையிலிருந்து கடந்த 19-ஆம் தேதி மாலை 1,100 பெட்டிகளில் 180 மில்லி மதுப் புட்டிகள் ஏற்றப்பட்ட லாரி சிவகங்கைக்கு புறப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் செல்வராஜ் (40) லாரியை ஓட்டினாா்.
ஒரு பெட்டிக்கு 48 புட்டிகள் வீதம் 52,800 புட்டிகளை ஏற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. வழியில் லேனா விலக்குப் பகுதியில் லாரியை நிறுத்தி ஓட்டுநா் தேநீா் குடித்துவிட்டு, மீண்டும் புறப்பட்டாா். திருமயம் அருகே வந்தபோது, லாரியின் தாா்ப்பாய் கலைந்து காற்றில் பறந்தது தெரியவந்து.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடிக்கு வந்த பிறகு லாரியை நிறுத்தி ஓட்டுநா் இறங்கி பாா்த்தாா். அப்போது, 19 பெட்டிகளில் இருந்த ரூ.1,27,680 மதிப்பிலான 912 மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் லாரி உரிமையாளரான சென்னையைச் சோ்ந்த நடராஜன் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளா் சிவக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.