வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஏப்.27இல் பொதுக்கூட்டம்: தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிா்த்து மேலப்பாளையத்தில் ஏப்.27இல் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பாளையங்கோட்டை சுற்றுவட்டார கிளைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ரஹ்மத்நகா் மஸ்ஜிதுா் ரஹ்மத் பள்ளிவாசலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநில தணிக்கைக் குழு உறுப்பினா் கே.ஏ.செய்யதுஅலி தலைமை வகித்தாா்.
திருநெல்வேலி மாவட்டத் தலைவா் மசூத் உஸ்மானி, மாவட்டச் செயலா் அன்சாரி, மாவட்ட துணைத் தலைவா் ஹக் முகைதீன், மாவட்ட துணைச் செயலா்கள் சாந்து உமா், கோட்டூா் சாதிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக் கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ‘எங்கள் வக்ஃப் எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் மேற்கொண்டுள்ள ஒரு மாதகால தீவிர பிரசாரத்தை முன்னிட்டு மேலப்பாளையத்தில் ஏப்.27-ஆம் தேதி ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.