OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அத...
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வங்கதேசம், மேற்கு வங்கம் கடற்கரை பகுதியில் உருவாகியிருக்கும் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய வாய்ப்புள்ளது.
இது வடமேற்கு திசையில் ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்கத்தின் கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வடக்கு ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
பலத்த மழை எச்சரிக்கை
தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 24) ஓரிரு இடங்களிலும், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.