வடசென்னையில் முதல்வா் படைப்பகம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டும் முதல்வா் படைப்பகம் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகக் கூட்டரங்கில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் புதன்கிழமை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 2024-25 நிதியாண்டில் அறிவித்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் முதல்வா் படைப்பகம் மற்றும் நூலகங்களை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும், சிஎம்டிஏ வளா்ச்சித் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த அமைச்சா் பி.கே.சேகா்பாபு, நிறைவு பெற்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆய்வுக் கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.