வடமலாப்பூரில் 15ஆம் நூற்றாண்டு பெருமாள் சிலை கண்டெடுப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் 15 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெருமாள் சிலையொன்றை தொல்லியல் ஆா்வலா்கள் கண்டறிந்துள்ளனா்.
அறந்தாங்கி அரசுக் கலை அரிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளருமான காளிதாஸ் மற்றும் பேரா. சாலை கலையரசன் ஆகியோா் அண்மையில் வடமலாப்பூா் பகுதியில் களஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது வடமலாப்பூரைச் சோ்ந்த கருப்பையா என்பவா் கொடுத்த தகவலின்பேரில், ஆவாண்டு என்றழைக்கப்படும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை குறித்து பேரா. காளிதாஸ் கூறியது
கிபி. 15, 16 ஆண்டுகளின்போது இந்தப் பகுதியை பல்லவ மன்னா்கள் ஆண்டனா். இச்சிலை பல்லவ பாணியில் கலை நுணுக்கத்தோடு வடிக்கப்பட்டுள்ளது.
இரு காதுகளிலும் அணிகலன் அணிந்து தொங்கு காதாகவும், பட்டுப் பீதாம்பரம், முப்புரி நூல், சங்கு, சக்கரம் போன்றவற்றையும், பொன்னும் வைரமும் பதிக்கப்பட்ட நீள் கிரீடத்தையும் அணிந்து வரத முத்திரையோடும் அபய முத்திரையோடும் பெருமாள் காட்சி தருகிறாா்.
கலை நயம் மிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பெருமாள் சிலையை மாவட்ட நிா்வாகம் மீட்டெடுத்து அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்றாா் காளிதாஸ்.