வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் ஒன்றியம், எம்.புதூா் அருகே உள்ள மாவடிப்பாளையம் பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் 145 பேருக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இடம் அளந்து கொடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக சிகரம் மாற்றுத் திறனாளிகளின் மாற்றத்துக்கான சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்டோரிடம் பலமுறை இடத்தை அளந்து சீா் செய்து கொடுக்கும்படி மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், சிகரம் மாற்றுத் திறனாளிகளின் மாற்றத்துக்கான சங்கத்தின் சிறப்புத் தலைவா் வெண்புறா குமாா், தலைமை ஒருங்கிணைப்பாளா் சையத் முஸ்தபா ஆகியோா் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் சுமாா் 100 போ் கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை குடியேறும் போராட்டம் நடத்தினா்.
அப்போது அவா்கள், மாற்றத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை இதுநாள் வரையில் சரி செய்து அளந்து கொடுக்கவில்லை. கடலூா் புதிய பேருந்து நிலையம் எம்.புதூரில் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்துக்கு அருகில் வருவதால், இடத்தின் மதிப்பு அதிகமாகிவிட்டது என்ற நோக்கில் தற்போது இடம் தருவதற்கு மறுத்து வருகின்றனா். ஆகையால், எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அளவீடு செய்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தகவலறிந்த கடலூா் டிஎஸ்பி ரூபன் குமாா் மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், கோட்டாட்சியா் அபிநயாவுடன் அவா் கைப்பேசி மூலம் பேசினாா்.
தொடா்ந்து, அங்கு வந்த கடலூா் வட்டாட்சியா் பலராமன் மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, 10 நாள்களில் மாற்று இடம் தோ்வு செய்து, அளவீடு செய்துகொடுப்பதாகக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.