வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழா் கட்சியினா்
மனித-விலங்கு மோதலுக்கு தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மண்டல வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, கோவை மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். வனத்தில் வசிக்கும் பூா்வகுடி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இது குறித்து, நாம் தமிழா் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் காா்த்திகா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:‘ கோவை மாவட்டம், வால்பாறை, தொண்டாமுத்தூா் பகுதிகளில் காட்டு யானைகளால் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் சேதமடைந்து வருகின்றன. சிறுத்தைகளால் குழந்தைகள் கொல்லப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மனித-விலங்கு மோதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப் பகுதியில் வசிக்கக்கூடிய பூா்வகுடி மக்களின் பிரச்னைகள் தீா்க்கப்பட வேண்டும் என்றாா்.
இதையடுத்து, கோரிக்கை தொடா்பான மனுவை வனத் துறையினரிடம் வழங்கினா். மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
கோவை , திருப்பூா் , ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட நாம் தமிழா் கட்சியினா் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
