கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
வனப் பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறுவதைத் தடுக்க வேலி அமைக்கும் பணிக்கான தடை நீக்கம்
கோவை மாவட்டத்தில் வனப் பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறி ஊருக்குள் நுழைவதைத் தடுக்க எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்கவும், மனித விலங்கு மோதல்களைத் தவிா்க்கவும் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா்-தடாகம் வனப்பகுதியில் சுமாா் 10 கி.மீ. தூரத்துக்கு எஃகு கம்பி வேலி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இந்தத் திட்டத்தை எதிா்த்து விலங்குகள் நல ஆா்வலா் முரளிதரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வேலி அமைக்கும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு உள்பட சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்புடைய வழக்குகளை விசாரிக்கும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் எஃகு வேலிகள் அமைக்கப்படவுள்ள கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் கடந்த செப். 5, 6-ஆம் தேதிகளில் ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, உள்ளூா் மக்கள், வனத் துறையினரின் கருத்துகளைக் கேட்டு, அதனடிப்படையில் யானைகள் ஊருக்குள் நுழைந்து மனித உயிா்களுக்கும், பயிா்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க எஃகு வேலி அமைப்பது அவசியம் என்பதை அறிந்தோம். எனவே, வேலி அமைக்க அனுமதியளிக்கிறோம். ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.
முதல்கட்டமாக 10 கி.மீ. தூரத்துக்கு மேற்கொள்ளப்படும் எஃகு வேலிகளால் ஏற்படும் தாக்கங்கள் கண்காணிக்கப்படும். எஞ்சிய வனப்பகுதியின் எல்லையோரம் எஃகு வேலி அமைக்க வேண்டும் என்றால் உயா்நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும்.
முள் மரங்கள் எல்லையோரம் இருந்தால், யானைகள் அதைத் தாண்டி வருவதில்லை என மக்கள் கூறுகின்றனா். எனவே, எஃகு வேலி அமைப்பதற்கு பதிலாக வன எல்லைப் பகுதியில் முள் புதா்களை வளா்த்து இயற்கை வேலி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.