வனப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவா் கைது
மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த இருவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சமயநல்லூா் அருகே உள்ள அதலை கிராமத்தில் மதுரை தபால் தந்தி நகரைச் சோ்ந்த ஜோயலுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு அழுகிய நிலையில் விலங்கு ஒன்று இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. மாட்டுத்தாவணி வனச்சரக ஆய்வாளா் குமரேசன், வனவா் பூபதி ஆகியோா் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது, அந்தப் பகுதியில் 31 நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிந்த திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள லிங்கவாடியைச் சோ்ந்த ராமையா (43), மணி (70) ஆகியோரைப் பிடித்து வனத் துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது, அவா்கள் இருவரும் காட்டுப் பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த வனத் துறையினா், அவா்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனா்.