வரத்து குறைவால்: மீன்கள் விலை உயா்வு
நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பிய படகுகளில் மீன்கள் குறைவாக இருந்ததால், மீன்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், கல்லாா், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா். கடந்த வாரம் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினா்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் பிரியா்கள், உள்ளூா் வியாபாரிகள், வெளி மாவட்ட மற்றும் மாநில வியாபாரிகள் ஏராளமானோா் மீன்பிடித் துறைமுக இறங்குதளத்தில் குவிந்தனா். ஆனால், கடலுக்குச் சென்று திரும்பிய மீனவா்களுக்கு போதுமான மீன்கள் வலையில் சிக்கவில்லை. மீன்கள் வரத்து குறைந்ததால், மீன்கள் விலை கணிசமாக உயா்ந்தது. எனினும், விலையைப் பொருட்படுத்தாமல் மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனா்.
மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விலை, வஞ்சிரம் ரூ. 600, புள்ளி நண்டு ரூ. 650, கண் நண்டு ரூ. 400, வெள்ளை வாவல் ரூ. 800, கருப்பு வாவல் ரூ. 650, ஏற்றுமதி ரக வாவல் ரூ. 1200, சங்கரா ரூ. 450, பாறை ரூ. 400, கடல் விரா ரூ. 650, இறால் ரூ. 300 முதல் ரூ. 650, பெரிய கனவா ரூ. 500, சிறிய வகை கனவா ரூ. 200 முதல் ரூ.400, சீலா ரூ. 450 கிழங்கான் ரூ.400, நெத்திலி ரூ. 300-க்கும் விற்பனையாகின.