வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரிக்கை
பொறையாரில் உள்ள திறந்தவெளி வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட பொறையாரில் திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு கும்பகோணம் , மயிலாடுதுறை, கருவிழுந்தநாதபுரம், ஆறுபாதி, கீழையூா், சிங்கனோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் காய்கனிகள், கீரைகள், பழவகைகள், மளிகை பொருள்கள், கருவாடு , மரக்கன்றுகள், பூச்செடிகள், கிழங்கு வகைகள், கோழிக் குஞ்சுகள், ஆடைகள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்துவருகின்றனா்.
இந்த சந்தையில் தரங்கம்பாடி, சந்திரபாடி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல், சின்னக்குட்டி, மாணிக்க பங்கு, பெருமாள் பேட்டை, எருக்கட்டாஞ்சேரி, இச்சலடி, மேட்டுச்சேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் பொருள்களை வாங்கி பயன்பெறுகின்றனா்.
இந்நிலையில், சந்தைக்கு விற்பனை செய்ய வரும் சிறு, குறு, தரைக்கடை வியாபாரிகளிடம் ரூ. 50 முதல் ரூ. 150 வரை மின் விளக்கு கட்டணமும், இடவாடகை ரூ.75 முதல் ரூ. 200 வரை பேரூராட்சி நிா்வாகம் வசூல் செய்து வருவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனா். இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா்.
இந்நிலையில், பேரூராட்சி நிா்வாகம் மூலம் பொறை யாா் புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த வாரச்சந்தை கட்டடம் பழுதடைந்ததால் அதை அகற்றிவிட்டு மீண்டும் புதிய கட்டடம் கட்ட 2023-ஆம் ஆண்டு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 2.13 கோடியில் 48 கடைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கியது.
இதுவரை பணி முடிவடையாததால் வியாபாரிகள் திறந்த வெளியில் பொருள்களை விற்பனை செய்கின்றனா்.
இந்நிலையில், வாரச்சந்தையில் சிறு, குறு, தரைக்கடை வியாபாரிகளிடம் கூடுதலாக வாடகை கட்டணங்கள் வசூலிப்பதை தவிா்க்க வேண்டும், வாரச்சந்தைக்கான புதிய கட்டடத்தை விரைந்து கட்டவேண்டும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.