ED Raid: அமைச்சர் துரைமுருகன் வீடு... அதிகாலை 2.30 மணிக்கு முடிவுக்கு வந்த ரெய்ட...
வரி உயா்வு: காரைக்குடியில் கடையடைப்பு நடத்த முடிவு
காரைக்குடி: மத்திய, மாநில அரசுகளின் வரி உயா்வை எதிா்த்து காரைக்குடியில் கடையடைப்புப் போராட்டம் நடத்துவது என தொழில் வணிகக் கழகம் முடிவு செய்தது.
காரைக்குடியில் இந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் சாமி. திராவிடமணி தலைமையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காரைக்குடிகோட்ட துணைப் பொது மேலாளா் பினு, உதவிப் பொது மேலாளா் ராமநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பொருளாளா் கேஎன். சரவணன் முன்னிலை வகித்தாா்.
பின்னா் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் காரைக்குடி மாநகராட்சி நிா்வாகம் புதிதாக வணிக நிறுவனக் கட்டடங்களை மீண்டும், மீண்டும் அளவெடுப்பது, ஏற்கெனவே விதிக்கப்பட்ட வரி நிலுவைக்கு 6 சதவீதம் கூடுதல் வரி விதித்தது, வாடகைக் கட்டடங்களுக்கு மத்திய அரசு 18% சதவீத ஜிஎஸ்டி வரி விதித்தது ஆகியவற்றை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த மக்கள் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்தி வைக்க வலியுறுத்தி காரைக்குடி மாநகரில் கடை அடைப்பு, கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக அமைப்பின் செயலா் எஸ். கண்ணப்பன் வரவேற்றாா். துணைத் தலைவா்கள், இணைச் செயலா்கள், செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.