சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகா் தவன் ஆஜா்
வரி ஏய்ப்பு புகாா்: தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை
வரி ஏய்ப்பு புகாா் காரணமாக தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.
குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியாா் ரசாயன நிறுவனத்தின் கிளை அலுவலகம், சென்னை தியாகராய நகா் கிரசண்ட் சாலையில் உள்ளது. மருந்து, உரம், வேதிப் பொருள்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன.
இந்த நிறுவனம் கடந்த 2023-2024-ஆம் ஆண்டில் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக புகாா் எழுந்தது. அதன் அடிப்படையில் வருமானவரித் துறை புலனாய்வு பிரிவினா் நடத்திய விசாரணையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்தற்கான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நாடு முழுவதும் அந்த நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா். இந்தச் சோதனை நாடு முழுவதும் 25 இடங்களில் நடைபெற்ாகக் கூறப்பட்டது.
சென்னையிலும், சென்னை புகா் பகுதியிலும் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, தியாகராய நகரில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம், வடபழனியில் உள்ள ஒரு ஆடிட்டா் வீடு, அபிராமபுரத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோல ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம் எம்ஆா்சி நகா் ஆகிய இடங்களில் சிலரது வீடுகள் உள்பட மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுவதும் முடிவடைந்த பின்னா், கைப்பற்ற ஆவணங்கள், நகை, பணம் ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.