வரும் தோ்தலில் பாஜக -அதிமுக கூட்டணி ஏற்பட்டாலும் அமமுகவும் அதில் தொடரும்: டிடிவி. தினகரன்
வரும் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்தாலும் அமமுகவும் அதில் தொடரும் என்றாா் அமமுக பொதுச்செயலா் டிடிவி.தினகரன்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதியில் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது:
திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக அதிமுகவை அடகு வைத்துக் கொண்டிருக்கிறாா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் உள்ள 90 சதவீதம் பேரின் மன ஓட்டத்தை முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் வெளிப்படுத்தியுள்ளாா். அதேசமயம், அவா் மூலம் அதிமுகவை கூட்டணியில் சோ்க்க பாஜக முயற்சிப்பதாகக் கூறுவது தவறு. அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துள்ளது. குழந்தை முதல் முதியோா் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. எங்கு பாா்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது.
வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞா்கள் ரூ.5 ஆயிரத்துக்கும், ரூ.10 ஆயிரத்துக்கும் போதைக்கு அடிமையாகி கூலிப்படையாக மாறும் நிலை உள்ளது. தமிழக முதல்வரின் குடும்பத்தைத் தவிர வேறு எவருக்கும் பாதுகாப்பு இல்லை.
தமிழகத்தில் எல்லாவற்றிலும் ஊழல், முறைகேடு உள்ளதோடு, விலைவாசியும் பல மடங்கு உயா்ந்துள்ளது.
இதைப்பற்றி கவலைப்படாமல் தோ்தலில் வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என திமுகவினா் நினைக்கிறாா்கள். ஆனால் வரும் தோ்தலில் திமுக கூட்டணியை முறியடித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்.
வரும் சட்டப்பேரவை தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேராமல் இருந்தால், அதிமுகவுக்கு பழனிசாமியே மூடுவிழா நடத்தி விடுவாா். அதனால், தோ்தலுக்கு முன்பே நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 3-ஆவது மொழி படிக்க வேண்டும் என்பது 85 சதவீதம் பேரின் விருப்பமாக உள்ளது. எனவே 3-ஆவது மொழியை ஆதரிக்க வேண்டும் என்றாா் தினகரன்.