வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி: திருக்குறுங்குடி வனப் பகுதிக்குச் செல்ல இன்றுமுதல் 5 நாள்கள் தடை
திருக்குறுங்குடி வனப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்புப் பணியையொட்டி, வியாழன்முதல் (ஏப். 24) இம்மாதம் 28ஆம் தேதிவரை 5 நாள்களுக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்படுவதுடன், நம்பிகோயில் சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு கோட்டத்துக்குள்பட்ட திருக்குறுங்குடி வனச் சரகத்தில் 2025ஆம்ஆண்டுக்கான வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி வியாழன்முதல் (ஏப். 24) இம்மாதம் 28ஆம் தேதிவரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருக்குறுங்குடி வனப்பகுதியிலுள்ள நம்பிகோயில் சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்படுகிறது. வரையாடுகள் கணக்கெடுப்பு காலங்களில் கோயில் வழிபாடு, சுற்றுலா போன்ற எந்தக் காரணங்களுக்காகவும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக, திருக்குறுங்குடி வனச் சரக அலுவலா் கு. யோகேஷ்வரன் தெரிவித்துள்ளாா்.