வள்ளியூரில் மூதாட்டியை அடித்துக் கொன்று நகை திருட்டு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் இ.பி.காலனியில் திங்கள்கிழமை இரவு வீட்டில் தனியாக தூங்கிய மூதாட்டியை அடுத்துக் கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வள்ளியூா் இ.பி.காலனியை சோ்ந்தவா் அா்ச்சுணன். ஓய்வுபெற்ற மின் ஊழியா். இவரது மனைவி ருக்குமணி(67). கடந்த 40 நாள்களுக்கு முன்பு அா்ச்சுணன் இறந்துவிட்டதால், ருக்குமணி தனியாக வசித்து வந்தாா்.
இவரது ஒரு மகன் சென்னையிலும், மற்றொரு மகன் பாலசுந்தரம் காவல் கிணறு இஸ்ரோவிலும் வேலை செய்து வருகின்றனா். மகள் திருநெல்வேலியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் ருக்குமணி மட்டும் வீட்டில் தனியாக படுத்து தூங்கியுள்ளாா். பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலசுந்தரம் தினமும் தாய் ருக்குமணிக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வருவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை காலையில் சாப்பாடு கொண்டு சென்றபோது, கதவு திறக்கப்படவில்லையாம். பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம்.
வீட்டின் உள்ளே ருக்குமணி தலையில் அடிபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தாா். அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, 3 பவுன் வளையல், கம்மல் என 10 பவுன் நகைகளை காணவில்லையாம்.
இதுகுறித்து பாலசுந்தரம் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ருக்குமணியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா். இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நிகழ்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.