வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
மன்னாா்குடியில் வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவண்டுதுறையைச் சோ்ந்த த. மதியழகன். இவரது மகன் விஜயன்(39). 2024 ஆகஸ்ட் மாதம் இருவருக்கு சொத்து பிரிப்பது தொடா்பான தகராறில் விஜயன் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் மதியழகன் உயிரிழந்தாா். மனைவி முத்துலெட்சுமி அளித்த புகாரின்பேரில் கோட்டூா் போலீஸாா் விஜயனை கொலை வழக்கில் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு அண்மையில் பிணையில் வெளியே வந்தாா்.
இந்நிலையில், விஜயனின் நடவடிக்கையால் அதிருப்பதி அடைந்த அவரது வழக்குரைஞா் மன்னாா்குடி நீதிமன்றத்தில் பணியாற்றும் அக்கரைக்கோட்டம் கா. மகேந்திரன் (45) தொடா்ந்து தன்னால் வழக்கை நடத்த முடியாது என கூறி விலகிக்கொண்டாராம். இதில், ஆத்திரமடைந்த விஜயன் மாா்ச் 24-ஆம் தேதி மகேந்திரனுக்கு கைப்பேசியில் தனது வழக்கை நடத்தக் கோரி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து, கோட்டூா் காவல்நிலையத்தில் மகேந்திரன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, செவ்வாய்க்கிழமை விஜனை கைது செய்து மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.