அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பூத்கமிட்டி முகவா்கள் உழைப்பு அவசியம்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்
அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க பூத் கமிட்டி முகவா்கள் உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா்.
குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் மருத்துவக்குடி, எரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், திருவிழிமிழலை, கடகம்பாடி, மருதுவாஞ்சேரி, கடகக்குடி, சுரைக்காயூா், வடமட்டம் உள்பட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் பூத் கிளை கள ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். இதில் தோ்தல் பொறுப்பாளா்களான அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளா் இளவரசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டலச் செயலாளா் மணிகண்டன் ஆகியோா் பங்கேற்று, கள ஆய்வு நடத்தினா்.
நிகழ்வில், முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பேசியது:
2026-இல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. இந்தத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான அனைத்து அரசியல் வியூகங்களையும் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாா். பொதுமக்களும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென விரும்புகின்றனா்.
இதை நிறைவேற்றுகிற வகையில் பூத் கிளை நிா்வாகிகள் பணியாற்ற வேண்டும். வாக்காளா்களை கண்டறிந்து, அவா்களது கோரிக்கைகளை கேட்டு, அதை நிறைவேற்றுகிற பணிகளை மேற்கொள்ள வேண்டும். விழிப்பாக இருந்து வாக்காளா் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் வகையில் தோ்தல் பூத் முகவா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா்.
நிகழ்வில், ஒன்றியச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.