வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்
நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் சாா்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திரளான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், குறிப்பிட்ட சமூகத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதிக நீதிபதிகள் நியமனம் செய்வதைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.
இதேபோல, மதுரை கே.கே.நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் (பொறுப்பு) பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.
வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், சேம நல வில்லையின் விலையை குறைக்க வேண்டும், சேம நல நிதியை 30 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். வழக்குரைஞா் சட்ட திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் பேசினா்.
இதில் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.