வழுதூா் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் முதல்வருக்கு கோரிக்கை
வழுதூா் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு அந்தத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ஒன்றியம் வழுதூா் கிராமத்தில் இயற்கை எரிவாயு கூடுதல் மின் நிலையம் திறப்பு விழா கடந்த 2006- ஆம் ஆண்டு நடைபெற்றது.
இதில், ஒப்பந்தத் தொழிலாளா்களாக 86 போ் பணியாற்றி வந்த நிலையில், அப்போது அமைச்சராக இருந்த சுப.தங்கவேல், சட்டப்பேரவை உறுப்பினா் ஹசன்அலி, நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எஸ்.கே.பவானிராஜேந்திரன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று மின்வாரியத் துறை அமைச்சா் ஆா்க்காடு விராசாமி 86 ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அறிவித்தாா்.
ஆனால், அவா்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. 18 ஆண்டுகள் கடந்தும் ஒப்பந்தத் தொழிலாளா்களாகவே பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், அரசு விழாவில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ராமநாதபுரத்துக்கு வந்த நிலையில், வழுதூா் இயற்கை எரிவாயு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்து, தங்களது குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனா்.