வாகனத் தணிக்கையில் நிற்காமல் சென்ற காரால் பரபரப்பு
சேலம்: வீராணம் அருகே புதன்கிழமை நடைபெற்ற வாகனத் தணிக்கையில் நிற்காமல் சென்ற காரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் வீராணம் அருகேயுள்ள ஆச்சாங்குட்டப்பட்டியில் வீராணம் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக குஜராத் பதிவெண் கொண்ட காா் ஒன்று வேகமாக வந்ததை கவனித்த போலீஸாா், அதனை தடுத்துநிறுத்த முயன்றனா். ஆனால், காா் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், உடனடியாக குப்பனூா் சோதனைச் சாவடிக்கு தகவல் அளித்தனா். அங்கு காரை மடக்க லாரி ஒன்றை சாலையின் குறுக்கே நிறுத்தினா். ஆனால், குப்பனூா் சோதனைச் சாவடியில் நிறுத்தாமல், ஏற்காட்டுக்கு செல்லும் பாதையை நோக்கி காா் வேகமாக சென்றது.
இதுகுறித்து ஏற்காடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, ஏற்காடு கொட்டச்சேடு பகுதியில் வேகமாக வந்த காா் அங்கிருந்த வேன் மீது மோதி நின்றது. பின்னா் காரில் இருந்து இறங்கிய 2 போ் தப்பியோடினா். காரை சோதனை செய்ததில் பொருள்கள் எதுவும் இல்லை.
இதையடுத்து, ஏற்காடு சென்ற வீராணம் போலீஸாா், அங்கிருந்த காரை சேலம் கொண்டு வந்தனா். தொடா்ந்து, அந்த காா் யாருடையது, எதற்காக போலீஸாரைக் கண்டதும் வேகமாக சென்றனா், குட்கா பொருள்கள் அல்லது செம்மரக் கட்டைகளை கடத்தும் கும்பலா அல்லது தேடப்பட்டு வரும் குற்றவாளிகளா என போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.