ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு
திருவாடானை அருகே திங்கள்கிழமை பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஆயுதப் படைக் காவலா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (48). இவா் ராமநாதபுரம் ஆயுதப் படைப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்த இவா், தனது மனைவியின் ஊரான கள்ளிக்குடியிலிருந்து தொண்டிக்குச் செல்வதற்காக மணக்குடி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது, தொண்டியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முருகானந்தம் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, திருப்பாலைக்குடி காவல் நிலைய போலீஸாா் முருகானந்தத்தின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.