ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்....
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: கைப்பேசிக்கு தடை
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், 19 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துணை ராணுவப் படையினரின் இரண்டு கம்பனிகள், தில்லி காவல் துறையினா் உள்பட மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக சிறப்பு காவல் ஆணையா் தேவேஷ் சந்திர ஸ்ரீவத்வா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, நாங்கள் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். அங்கு கைப்பேதிகள் பயன்படுத்துவது கண்டிப்பாகத் தடை செய்யப்படும்.
தில்லி காவல் துறை ஏற்கெனவே அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளை நடத்தியுள்ளது. மேலும் தலைநகரில் வாகனப் போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.