வாழப்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி
வாழப்பாடி: வாழப்பாடியில் சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால், கிழக்குக்காடு சாலை துண்டிக்கப்பட்டது. அதனால், இப்பகுதியில் இணைப்புச் சாலை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி பகுதியில் 4 கி.மீ. இருவழி புறவழிச்சாலை 4 வழிச்சாலையாக தரம் உயா்த்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 4 வழிச்சாலை அமைக்கும் போது, வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதியில் இருந்து நீதிமன்றம் வழியாக கிழக்குக்காடு குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வழியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இணைப்புச்சாலை அமைத்து பால் கூட்டுறவு சங்கம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை சுரங்க பாலத்தோடு கிழக்குக்காடு சாலையை இணைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, பால் கூட்டுறவு சங்கத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு 100 மீ. தொலைவுக்கு மட்டுமே இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசெல்ல வழியின்றி தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து கிழக்குக்காடு பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சக்திவேல் கூறுகையில், ‘வாழப்பாடியில் இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயா்த்தும் போது, கிழக்குக்காடு செல்லும் சாலைதுண்டிக்கப்பட்டது. இதனால் சாலையோரமாக உள்ள குண்டும் குழியுமான சாலையிலேயே சென்று வருகிறோம். தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துசெல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, இப்பகுதி மக்களின் நலன்கருதி இணைப்புச் சாலை அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.