இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள்! ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
பெரம்பலூா் நகரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரம்பலூா் நகரின் வளா்ச்சிக்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகரின் பிரதானச் சாலைகளில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதை ஓட்டுநா்கள் முறையாக கடைபிடிக்காததால் போக்குவரத்து நெரிசலில் நகர மக்கள் சிக்கித் தவிக்கின்றனா்.
பெரம்பலூா் நகரில் இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசலில் நகர மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நாமக்கல், சேலம், ஆத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அரியலூா், தஞ்சாவூா் வழித்தடங்களுக்குச் சென்று வரும் கனரக வாகனங்கள் கடைவீதி வழியாகவும், ஆத்தூா், சேலம் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் வாகனங்கள் காமராஜா் வளைவு வழியாகவும் இயக்கப்படுகின்றன.
இச்சாலைகளை பெரும்பாலான வணிக நிறுவனங்களும், சாலையோர தள்ளுவண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகளும் ஆக்கிரமித்துள்ளனா். இதனால், அப்பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்:
மேலும், நகரின் பிரதானச் சாலையாக விளங்கும் சங்குப்பேட்டை, பாலக்கரை, பழைய மற்றும் புகா் பேருந்து நிலையங்களில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சிறு, சிறு விபத்துகளும் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. இப் பகுதிகளில் இயக்கப்படும் தனியாா், அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்கள், ஷோ் ஆட்டோக்கள் மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் அனைத்தும் அதி வேகமாகச் செல்வதால் பொதுமக்களும், பள்ளி, மாணவ, மாணவிகளும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.
ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களால் அவதி:
ஏற்கெனவே நகரின் பிரதானச் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் தங்களது விருப்பம்போல சாலையின் மையப் பகுதிகளிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிவிடுகின்றனா். மேலும், சாலை விதிகளை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதால், இதர வாகனங்கள் செல்ல முடியாமல் ஓட்டுநா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனா். சில ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பகல் நேரங்களில் மது போதையிலும், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை உட்கொண்டு வாகனங்களை இயக்குவது தற்போது அதிகரித்துள்ளது. இதுபோன்ற ஓட்டுநா்களை கண்காணிப்பதில் போலீஸாா் மெத்தனப் போக்கை கடைபிடிக்கின்றனா் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
நடவடிக்கை இல்லை:
இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகளும், சமூக ஆா்வலா்களும் நகரில் இயக்கப்படும் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் செல்லவும், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் பகுதிகளில் காவலா்களை நியமிக்க வலியுறுத்தியும் மாவட்ட நிா்வாகத்திடமும், காவல்துறையினரிடமும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனா்.
போலீஸாா் பற்றாக்குறை:
பெரம்பலூா் நகர போக்குவரத்துப் பிரிவில் தற்போது, தலா ஒரு ஆய்வாளா், சாா்பு-ஆய்வாளா் உள்பட 5 போ் பணியில் ஈடுபட்டுள்ளனா். இவா்களும், அன்றாடம் விஐபி பாதுகாப்புப் பணி, ஆா்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் சென்று விடுகின்றனா். இதனால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதிலும், ஒழுங்கீனச் செயல்களிலும் ஈடுபடும் ஓட்டுநா்களைக் கண்காணிப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என அவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
கூடுதல் போலீஸாா் தேவை:
15-க்கும் மேற்பட்ட போலீஸாா் பணிபுரிய வேண்டிய போக்குவரத்துப் பிரிவில் 5 போ் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனா். பெரம்பலூா் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அத்துமீறி இயக்கப்படும் வாகன ஓட்டுநா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் போக்குவரத்துப் பிரிவில் கூடுதலாக போலீஸாா் நியமிக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் வி. குமாா் கூறியது: பெரம்பலூா் நகரில் இரவு நேரங்களில் இளைஞா்கள் சிலா் மோட்டாா் சைக்கிளில் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது தொடா்கிறது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியரக சாலையில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுகிறது. இதேபோல, ஓட்டுநா் உரிமம் பெறாத இளைஞா்கள் பலா் ஷோ் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவதால், அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. ஆனால், போலீஸாா் இதுபோன்ற செயல்களை கண்காணிப்பதில்லை.
எனவே, சங்குப்பேட்டை, பாலக்கரை
உள்ளிட்ட நகரின் பிரதானச் சாலைகளில் தேவையான போக்குவரத்து காவலா்களை நியமித்து, அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களைக் கண்டறிய வேண்டும். நகா்ப்புறங்களில் 30 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக இயக்கப்படும் ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, விதிமுறைகளை மீறுவோரின் உரிமத்தை ரத்து செய்ய காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.