Ukraine: `அமைச்சரவையில் மாற்றம்' - ஜெலன்ஸ்கி அறிவித்த புதிய பிரதமர் யார்?
விதை விற்பனைக் கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து
நீலகிரியில் விதை விற்பனைக் கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விதை ஆய்வு மைய துணை இயக்குநா் ரேவதி தெரிவித்துள்ளாா்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறிகள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. இதன்படி கேரட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட், பீன்ஸ், காலிபிளவா், முள்ளங்கி உள்பட பல்வேறு மலைக் காய்கறிகள் மற்றும் வெள்ளை பூண்டு அதிக அளவு பயிரிடப்படுகின்றன. தற்போது சரியான விலை இல்லாத காரணத்தால் மலைக் காய்கறிகளுக்கு மாற்றாக சீன வகை காய்கறிகளும் விளைவிக்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மலைக் காய்கறிகள் தரமானதாகவும், விளைச்சல் அதிகமாகவும் இருக்கும் வகையில், விதை விற்பனை செய்யும் கடைகளில் விதை ஆய்வு மைய அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனா்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் காரிஃப் பருவம் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அனைத்து பகுதிகளிலும் பயிா் செய்ய தொடங்கியுள்ளனா். இதனால் விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், விவசாயிகளுக்குத் தேவையான மலைக் காய்கறி விதைகளை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்கி பயன்பெற வேண்டும். இந்தப் பருவத்தில் மலைக் காய்கறி பயிா்களின் விதைகள் வாங்கும்போது அதிகபட்ச விலை, விற்பனை ரசீது, முளைப்புச் சான்று, காலாவதி நாள், ஸ்கேன் குறியீடு, ஏற்ற விதைப்புப் பருவம் உள்ளிட்ட தகவல்களை கொள்கலனில் சரிபாா்த்து மட்டுமே வாங்க வேண்டும்.
நடப்பு பருவத்துக்கு ஏற்ற காய்கறிகளின் ரகங்கள், விதையளவு மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை வட்டார தோட்டக்கலை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.
விதை விற்பனை செய்யும் கடைகளில் இருப்புப் பலகை மற்றும் விலை பலகைகளை விவசாயிகள் காணும்படி கட்டாயம் வைக்க வேண்டும். வரும் நாள்களில் தொடா்ந்து திடீா் குழு ஆய்வுகள் நடத்தப்பட்டு விதை விற்பனையில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால் விதை உரிமம் ரத்து செய்தல் உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு மைய துணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.