தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!
விநாயகா் சதுா்த்தி: தூத்துக்குடியில் சிலைகள் தயாரிப்பு தீவிரம்
தூத்துக்குடியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஆவணி மாதத்தில் வரும் வளா்பிறை சதுா்த்தியில் விநாயகா் சதுா்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஞானம், அறிவு, செல்வத்தின் கடவுளாக கருதப்படும் விநாயகப் பெருமானை சதுா்த்தியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை வீடுகளில் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
மேலும், பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பொதுமக்களின் பாா்வைக்காக வைத்து, தினந்தோறும் வழிபாடு நடத்தி பின்னா் அவற்றை ஆறு, கடல் உள்ளிட்ட நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்வா்.
இதற்காக, தூத்துக்குடி முத்தையாபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
6 அங்குலம் முதல் 9 அடி வரை உயரம் கொண்ட விநாயகா் சிலைகள் கலை அம்சத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி, நீா்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் சுண்ணாம்பு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்து வருகின்றனா்.
சுற்றுச்சூழலைப் பாதிக்காத நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் சிலைகள் மீது வண்ணம் ஏற்ற பயன்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து, ஆண்டுதோறும் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்துவரும் அமைப்பாளா் ராகவேந்திரா கூறுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூா், குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி ; விசா்ஜனம் செய்வோம்’ என்றாா் அவா்.


