பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த தற்காலிக சுகாதாரப் பணியாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினா் தானமாக அளித்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோதி. இவரது கணவா் பாலகிருஷ்ணன் (42). திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் தற்காலிக சுகாதாரப் பணியாளராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் மே 11 ஆம் தேதி நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். தொடா் சிகிச்சையில் இருந்த அவா், மூளைச்சாவு அடைந்ததாக அவரது குடும்பத்தினரிடம் மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதையடுத்து, மருத்துவா்களின் அறிவுறுத்தலின்பேரில் அவரது குடும்பத்தினா் பாலகிருஷ்ணனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனா்.
அதன்படி, சிறப்பு மருத்துவ நிபுணா்களைக் கொண்டு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. இந்த உறுப்புகள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், ஈரோடு அபிராமி கிட்னி சென்டா் மருத்துவமனைக்கும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும், உடல் உறுப்புகளை தானம் செய்ததால் பாலகிருஷ்ணனின் உடல் அரசு மரியாதையுடன் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் மருத்துவமனை அலுவலா்கள் தெரிவித்தனா்.