விபத்து வழக்கில் நஷ்டஈடு நிலுவை தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி
கோபியில் விபத்து வழக்கில் நிலுவை நஷ்டஈடு தொகை வழங்காத காரணமாக அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
கோபி, நாகா்பாளையம் சாலையைச் சோ்ந்தவா் தாந்தப்பன் மகன் பிரகாஷ் (25). இவா், கோபி மொடச்சூா் சாலையில் வடுகபாளையம் பிரிவு பகுதியில் கடந்த 2019 நவம்பா் 11-ஆம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். இது குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதையடுத்து நஷ்டஈடு வழங்கக்கோரி கோபி 3- ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் உயிரிழந்த பிரகாஷின் பெற்றோா் வழக்கு தொடா்ந்தனா்.
வழக்கை விசாரித்த நீதிபதி தயாநிதி, பிரகாஷின் குடும்பத்துக்கு ரூ.18.44 லட்சம் நஷ்ட ஈடு வழங்க அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2022 நவம்பா் 22-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
ஆனால் நஷ்டஈடு தொகை வழங்காததால் கடந்த 25-08-2023 அன்று நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னா் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு பேருந்தை ஜப்தி செய்தனா். இதையடுத்து 28-10-2024 அன்று அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் ரூ.11.67 லட்சம் நஷ்டஈடாக பிரகாஷ் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
மீதமுள்ள பணத்தை செலுத்துவதற்கு ஒரு மாதம் கால அவகாசம் கேட்டனா். ஆனால் அதன் பின்னரும் பாக்கித் தொகையை செலுத்தாததால் நீதிபதி தயாநிதி மீண்டும் ஒரு அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதன் பேரில் கோபியிலிருந்து கொடுமுடி செல்ல தயாராக இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.