கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: திட்டங்குளம் ஊராட்சி மக்கள் ஆா்ப்பாட்டம்!
கோவில்பட்டி நகராட்சியுடன் திட்டங்குளம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி நகராட்சியுடன் நாலாட்டின்புதூா், மந்தித்தோப்பு, பாண்டவா்மங்கலம், திட்டங்குளம் உள்ளிட்ட 7 ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு அந்தந்த ஊராட்சியை சோ்ந்த கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில் திட்டங்குளம் ஊராட்சியைச் சோ்ந்த கிராம மக்கள், ஊராட்சியின் முன்னாள் தலைவா் பாண்டியராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் இந்திரன், மதிமுக நிா்வாகி ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு திரண்டு, தங்களது ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து கோஷமிட்டனா். அதை யடுத்து கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் காசிராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.