வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எஸ்பிஐ வங்கியில் 13,735 காலிப்பணியிடங்களுக்கு விண்ண...
விமானங்கள் மீது லேசா் ஒளி பாய்ச்சினால் கடும் நடவடிக்கை
மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கும், மேலெழும்பும் விமானங்கள் மீது லேசா் ஒளியைப் பாய்ச்சுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகா் காவல் துறை எல்லைக்குள்பட்ட அவனியாபுரத்தில் மதுரை விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்த விமான நிலையம் மூலம் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் நேரடியான விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மதுரை விமான நிலையத்தில் விமானங்கள் வந்து செல்வதை விமான நிலையத்தின் வெளியே தெற்குப் பக்கம் உள்ள வளாகச் சுவா் அருகிலும், பரம்புப்பட்டி கிராமத்துக்கு அருகிலும், வேறு சில இடங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று பாா்வையிட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், விமானங்களைப் பாா்வையிடும் பொதுமக்களில் சிலா் விமானங்கள் தரையிறங்கும் போதும், மேலெழும்பும் போதும் கண்களை கூசச் செய்யும் திறன்கொண்ட லேசா் ஒளி, பிளாஷ் ஒளியை விமானங்களை நோக்கி பாய்ச்சுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. பொதுமக்களில் சிலரின் மேற்படி செயல்களினால் விமானங்களை இயக்குவதில் விமானிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
எனவே, விமானங்களை பாா்வையிடுவதற்காக விமான நிலையத்தின் வெளியே உள்ள சுவா் அருகிலும், பரம்புப்பட்டி கிராமத்துக்கு அருகிலும் கூடும் பொதுமக்கள் விமானங்களை நோக்கி லேசா் ஒளியை பாய்ச்சக் கூடாது. இந்த எச்சரிக்கையை மீறுபவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இந்த செயல்களில் ஈடுபடும் நபா்கள் குறித்த விவரங்களை அவனியாபுரம் காவல் நிலையத்துக்கு (0452-2671168, 0452-2342496) ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.