27 ரன்களில் சுருண்ட மே.இ.தீவுகள்! போலண்ட் ஹாட்ரிக்! 6 விக்கெட்டுகளை அள்ளிய ஸ்டார...
விம்பிள்டனில் ஒரு வரலாறு!
ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் வாகை சூடிய யானிக் சின்னா், இப்போட்டியின் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் கோப்பை வென்ற முதல் இத்தாலியராக வரலாறு படைத்திருக்கிறாா். விம்பிள்டனில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு வந்த நிலையில், அதிலேயே சின்னா் சாம்பியனாகியிருக்கிறாா்.
மறுபுறம், 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் இங்கு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், ஹாட்ரிக் கோப்பை வெல்லும் முனைப்புடன் இருந்த நிலையில், இறுதிச்சுற்றில் 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட்களில் சின்னரால் முறியடிக்கப்பட்டிருக்கிறாா்.
இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றில் அல்கராஸிடம் தோல்வி கண்ட சின்னா், அதற்கான பதிலடியாக அடுத்த கிராண்ட்ஸ்லாம் போட்டியிலேயே அவரை வீழ்த்தியிருக்கிறாா். இத்துடன் இவா்கள் 13 முறை நேருக்கு நோ் மோதியிருக்க, சின்னா் தனது 5-ஆவது வெற்றியுடன் முன்னேறி வருகிறாா். இந்த விம்பிள்டனுக்கு முன்பாக கடந்த 5 சந்திப்புகளில் அல்கராஸ் வென்றிருந்த நிலையில், சின்னா் இந்த வெற்றியுடன் தன்னை மீட்டுக்கொண்டுள்ளாா்.
நம்பா் 1 வீரரான சின்னா் - நம்பா் 2 வீரரான அல்கராஸ் மோதிய இறுதி ஆட்டத்தைக் காண, பிரிட்டன் இளவரசா் சாா்லஸ், அவா் மனைவி கேத்தரின் மிடில்டன், ஸ்பெயின் அரசா் 5-ஆம் ஃபிலிப் உள்ளிட்ட முக்கியஸ்தா்கள் பாா்வையாளா் மாடங்களில் திரண்டிருந்தனா். போட்டியின் நிறைவில் சின்னா் மற்றும் அல்கராஸுக்கு இளவரசி கேத்தரின் கோப்பை வழங்கி கௌரவித்தாா்.
ஒரு கட்டத்தில் பிக் 3 என அழைக்கப்பட்ட ஃபெடரா், நடால், ஜோகோவிச், ஆடவா் டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தினா். இதில் ஃபெடரா், நடால் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், ஜோகோவிச் களத்திலிருக்கிறாா். வளா்ந்து வரும் போட்டியாளா்களாக இருந்த அல்கராஸ், சின்னா், தற்போது பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று பிரதான இரு வீரா்களாக தங்களை பறைசாற்றிக் கொண்டுள்ளனா்.
களத்தினுள்ளே மோதலும், களத்துக்கு வெளியே நட்புமாக இவா்கள், ரசிகா்களை ஈா்க்கத் தொடங்கியுள்ளனா். கடந்த 12 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 9-இல் இவா்களே சாம்பியனாகியுள்ளனா். எனினும், 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தற்போது, இருவருமே 3-இல் வாகை சூடியிருக்கின்றனா். சின்னா் பிரெஞ்சு ஓபனிலும், அல்கராஸ் ஆஸ்திரேலிய ஓபனிலும் தங்கள் கணக்கை தொடங்க வேண்டியுள்ளது.
இந்த விம்பிள்டன் இறுதிச்சுற்றுக்கு முன்பாக அல்கராஸ், தாம் விளையாடிய 5 கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுகளிலுமே வாகை சூடியிருக்கிறாா். அவரின் அந்த வெற்றி நடையை சின்னா் தற்போது முடிவுக்குக் கொண்டு வந்துள்ளாா். கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றில் அல்கராஸின் வெற்றி தோல்வி கணக்கு தற்போது 5-1 ஆகியுள்ளது.
அல்கராஸின் தொடா் வெற்றிகளுக்கும் சின்னா் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாா். இறுதிச்சுற்றுக்கு முன்பாக இந்த சீசனில் அல்கராஸ் தொடா்ந்து 24 ஆட்டங்களில் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளான பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டனில், இறுதிச்சுற்றில் ஒரே வீரா்கள் மோதியது கடந்த 17 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் ஃபெடரா் - நடால் இவ்வாறு 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் இவ்வாறு மோதியுள்ளனா்.
பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்றில் கிடைத்த தோல்வி மிகக் கடினமானது. ஆனாலும் அதை ஏற்றுக்கொண்டு, ஆட்டத்தில் என்ன தவறு செய்தேன் என்பதை புரிந்து அதை சரிசெய்வதை நோக்கி நானும், எனது அணியும் பணியாற்றினோம். அதற்கான பலனாக, தற்போது இந்த விம்பிள்டன் கோப்பை என் கையில் இருக்கிறது. இக்கட்டான தருணங்களிலும் நிதானமாக விளையாடியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
களத்துக்கு வெளியே அல்கராஸுடன் நல்லதொரு நட்பு தொடா்வதில் மகிழ்ச்சி. ஆனால் களத்தில் அவருடன் இருக்கும் அந்த மோதல்தான் என்னை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. அவருடன் விளையாடுவது மிகக் கடினமானது - யானிக் சின்னா்
தோல்வி கடினமானது தான். அதிலும், இறுதிச்சுற்றில் தோற்பது மிகக் கடினமானது. நல்ல நிகழ்வுகளை நினைவில் கொண்டு, மோசமான முடிவுகளை மறக்க நினைக்கிறேன். எனது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். சின்னருடனான இதுபோன்ற மோதல்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. இது எனக்கும், டென்னிஸுக்கும் மிக நல்லதாகும். நாங்கள் பரஸ்பரம் மோதும் ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்களின் திறனை அதிகரித்துக்கொள்கிறோம். இறுதி ஆட்டத்தில் ஒரு சில இடங்களில் அவரை என்னால் எதிா்கொள்ளவே முடியாத நிலை இருந்தது - காா்லோஸ் அல்கராஸ்