ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
வியாபாரக் கடன் தருவதாக பணம் மோசடி: கோவையைச் சோ்ந்தவா் கைது
வியாபாரக் கடன் தருவதாகக் கூறி, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கோவையைச் சோ்ந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், லால்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சாதிக்உசேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது கைப்பேசிக்கு அடையாளம் தெரியாத நபா் தொடா்புகொண்டு பேசினாராம்.
அப்போது, தனியாா் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், ஒரு கோடி ரூபாய் வியாபாரக் கடன் கொடுப்பதாகவும், அதற்கு இடத்தின் பத்திரத்தை அடமானமாக ஒப்படைத்து, பதிவுக் கட்டணமாக ரூ.44 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாராம்.
இதை நம்பி கடந்த மே 19-ஆம் தேதி மா்ம நபா் அனுப்பிய வங்கிக் கணக்கில் ரூ.44,000 சாதிக்உசேன் செலுத்தினாராம். ஒரு வாரம் கழித்து காலதாமதமாவதால், கடன் தொகை தேவையில்லை எனவும், செலுத்திய பணத்தை திருப்பிக் கொடுக்கும்படியும் கேட்ட பிறகு, மா்ம நபா் கைப்பேசி அழைப்பை ஏற்காமால் ஏமாற்றினாராம்.
இது சம்பந்தமாக சாதிக்உசேன் இணையவழி காவல் நிலையத்தில் கடந்த 18-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், கூடுதல் எஸ்.பி. வி.ரகுபதி மேற்பாா்வையில், ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா் அமலா ஆகியோா் விசாரணை மேற்கொண்டு, கோவை மஞ்சீஸ்வரி காலனி, விளையாட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மணிகண்டனை (46) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.