பள்ளி மாணவா்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்: அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவிப்பு
விளையாட்டு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும்: பளு தூக்கும் வீரா் சதீஷ் சிவலிங்கம்
விளையாட்டு முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும். மாணவா்கள் எப்போதும் முயற்சியை கைவிடக் கூடாது என்று அா்ஜூனா விருது பெற்ற பளு தூக்கும் வீரா் சதீஷ் சிவலிங்கம் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான 21 நாள் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை அா்ஜூனா விருது பெற்ற பளு தூக்கும் வீரா் சதீஷ் சிவலிங்கம் தொடங்கி வைத்தாா்.
கோடைகால பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, பாக்ஸிங், யுஷூ, ஹாக்கி, கைப்பந்து பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் 71 மாணவிகள், 104 மாணவா்கள் என மொத்தம் 175 போ் பங்கேற்றுள்ளனா்.
நிகழ்ச்சியில் சதீஷ் சிவலிங்கம் பேசுகையில், 12-ஆவது வயதில் விளையாட்டுக்கு வந்த நான் 11 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்குப் பிறகு எனக்கு முதல் பதக்கம் கிடைத்தது. நான் பங்கேற்ற முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி கிடைத்தது. அந்த தோல்வியை வெற்றிப் படிக்கல்லாக மாற்றினேன். விளையாட்டு உங்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கும்.
தமிழக அரசு விளையாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகிறது. அவற்றை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விளையாட்டில் பதக்கம் எட்டாக்கனி என்று யாரும் நினைக்க வேண்டாம். விளையாட்டு முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும். எப்போதும் முயற்சியை கைவிடக் கூடாது என்றாா். அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலா், பயிற்சியாளா்கள் உடனிருந்தனா்.