விவசாயிகளுக்கு ரூ. 61 லட்சத்தில் வேளாண் இயந்திரங்கள்
விவசாயிகளுக்கு ரூ.61 லட்சத்தில் வேளாண் இயந்திரங்களை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வழங்கினாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான முகாமை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தொடங்கிவைத்து பேசியதாவது: வேளாண் துறை, தோட்டக் கலை (ம) மலைப் பயிா்கள் துறை, வேளாண் பொறியியல் துறை போன்ற துறைகள் வாயிலாகவும் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.
விவசாயத்தில் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. வேளாண் இயந்திர உரிமையாளா்கள், விவசாயிகள், பொறியாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் ஆகியோா் இந்த முகாமில், காட்சிப்படுத்தியுள்ள புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் அதன் முக்கியத்துவம், பயன்பாடு, பராமரிப்பு குறித்து விளக்கம் அளித்தனா்.
எனவே, வேளாண் இயந்திர உரிமையாளா்கள், விவசாயிகள் ஆகியோா் துறை சாா்ந்த அலுவலா்களுடன் நேரில் கலந்துரையாடி தங்களது சந்தேகங்களை தெளிவு செய்து கொள்வதற்கும் இந்த முகாம் அடிப்படையாக அமைந்துள்ளது என்றாா் அவா்.
முகாமில் கூத்தலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம், இடைக்காட்டூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களைச் சோ்ந்த 5 உறுப்பினா்களுக்கு 70 சதவீதம் மானியத்தில்,
மொத்தம் ரூ.24 லட்சத்தில் டிராக்டா், ரொட்டவேட்டா் , 5 வரிசை கொத்து கலப்பையும், வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், சிவகங்கை, சிங்கம்புணரி, காளையாா்கோவில், இளையான்குடி, கல்லல், மானாமதுரை ஆகிய வட்டாரங்களைச் சாா்ந்த 18 விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.36 லட்சத்தில் வைக்கோல் கட்டும் இயந்திரம், நெல் நடவும் இயந்திரம், பவா் வீடா், பலா் டில்லா் ஆகியவை என மொத்தம் ரூ.61 லட்சத்தில் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு அமைச்சா் வழங்கினாா்.
இதில் இணை இயக்குநா் (வேளாண்மைத் துறை) சு.சுந்தரமகாலிங்கம், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) கோ.ராஜேந்திர பிரசாத், செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) சுப்பிரமணியன், துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) மு.சத்யா, உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) செல்வராஜ், விவசாயிகள் கலந்து கொண்டனா்.