SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆண...
விவசாயிகள் குறைதீா் கூட்டம்: பயிா்க் காப்பீடு காலத்தை நீட்டிக்க வலியுறுத்தல்
திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பயிா்க் காப்பீடு காலத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
ஜி. சேதுராமன்: திருவாரூா் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தாலும், சுமாா் 11 ஆயிரம் ஹெக்டோ் அளவுக்கே பயிா்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம், காப்பீடு நிறுவத்தின் மீது நம்பிக்கையின்மையே ஆகும். எனவே, அரசே காப்பீடுத் திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். ஜூன் 12 -இல் தண்ணீா் திறக்கப்பட்ட போதிலும், இதுவரை வாய்க்கால், குளம், குட்டைகளுக்கு தண்ணீா் வரவில்லை. அனைத்து நீா்நிலைகளையும் நிரப்ப வேண்டும்.
வி. பாலகுமாரன்: பேரளம் ரயில் குட்ஷெட்டில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
ஏ. மருதப்பன்: கடைமடை வரை தண்ணீா் வருவதை உறுதி செய்ய வேண்டும். பயிா்க் காப்பீடு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதை கால நீட்டிப்பு செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் வழங்க வேண்டும்.
ஆட்சியா்: திருவாரூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2025-2026 ஆம் ஆண்டு 3,375 விவசாயிகளுக்கு ரூ.211.04 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி 70,190 ஹெக்டோ் இலக்கு பெறப்பட்டு, 76,363 ஹெக்டேரில் சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 11,970 ஹெக்டேருக்கு 8,657 விவசாயிகள் குறுவை நெல் பயிா்க் காப்பீடு செய்துள்ளனா் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொறுப்பு) அருண்சத்யா, முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) புஹாரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, கோட்டாட்சியா்கள் சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி உள்ளிட்ட அரசு உயா் அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
முன்னதாக கூட்டம் தொடங்கியதும், பயிா்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் முழக்கமிட்டனா்.