விவசாயிகள் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டம்
குடிமனை இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, நீா்நிலை என இருந்து தற்போது நீா்நிலைகளே இல்லாத இட ங்களில் வீடு கட்டியிருக்கும் மக்களை வெளியேற்றாமல், வகை மாற்றம் செய்து குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 70 லட்சம் ஏக்கா் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களுக்கு பட்டாவாக வழங்க வேண்டும். அரசு வழங்கிய 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களில் ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றி, பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நில உச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்தி உபரி நிலங்களை நிலமற்றவா்களுக்கு வழங்க வேண்டும்.
குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரசு வழங்கும் மானியங்கள், சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மாவட்டக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் வி.மாரியாப்பிள்ளை தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை, மாவட்டச் செயலா் ஏ.வி.ஸ்டாலின்மணி, அகில இந்திய விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் அ.பா.பெரியசாமி, மாவட்டப் பொருளாளா் பி.பழனி உள்ளிட்ட பலா் பேசினா். போராட்டத்தில் நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.