நடந்து சென்ற முதியவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே 100 நாள் வேலைக்கு சாலையில் நடந்து சென்ற முதியவா் டிராக்டா் மோதியதில் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பன் (81). இவா் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 10 மணிக்கு 100 நாள் வேலைக்குச் செல்வதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து தோப்பூா் செல்லும் சாலையில் உள்ள மணி என்பவரது விளை நிலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த டிராக்டா் மோதியதில் கருப்பன் பலத்த காயமடைந்தாா். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே முதியவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா், டிராக்டரை ஓட்டிச் சென்ற சிறுவனின் பெரியப்பாவான சின்னமணி (45) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.